






















Updated on:
புதுடெல்லி: நீட் உள்ளிட்ட தேர்வுகளின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையை வலுப்படுத்துவதற்காக, தேர்வு அதிகாரிகளுக்கான பிரத்யேக டிஜிட்டல் பயிற்சித் திட்டத்தை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தொடங்கியுள்ளது.
‘ஐகாட் கர்மயோகி பாரத்' தளத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து என்டிஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
‘பரிக்ஷா கர்மயோகி: தேர்வு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், தேர்வுப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்தவும், ஆஃப்லைன் தேர்வுகளை சீராக, பாதுகாப்பாக மற்றும் தரமாக நடத்துவதை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வுப் பணியாளர்கள், குறிப்பாக மையக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்களுக்காக இந்தப் பாடநெறி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி 4 பகுதிகளை கொண்டது. தேர்வுகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிப்பதில் தேர்வுப் பணியாளர்களின் பங்கு குறித்து முதல் பகுதியில் விளக்கப்படுகிறது. தேர்வு மையத் தயார்நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட தேர்வு நடப்பதற்கு முந்தைய ஆயத்தப் பணிகளை 2-ம் பகுதி உள்ளடக்கியுள்ளது.3-ம் பகுதியானது தேர்வு நடக்கும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகளை நான்கு கட்டங்களாக (தேர்வுக்கு முன், தேர்வு தொடங்கும்போது, தேர்வின்போது மற்றும் தேர்வுக்குப் பிறகு) கையாள்கிறது.
4-ம் பகுதியானது. முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பொறுப்புகளின் சுருக்கமான மறுபார்வையை வழங்குகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெற உள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。