


















Updated on:
விருதுநகர்: ‘ஒரு மாத கால தவெக ஆட்சியின் செயல்பாடுகள் அருமையாக உள்ளது. சமூக வலைதளங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் காரணம் இல்லாமல் எங்கள் மீது பழி தூற்றுவது குறித்து கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டவர்கள். நாங்கள் இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மேட்டமலையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “100 நாள் வேலைத் திட்டம் கும்மியடிக்கும் திட்டம் போல, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, கையெழுத்து போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். எனவே 100 வேலைத் திட்ட பணியாளர்களை சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். சீமைக்கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் விவசாயத்தை அழித்துவிட்டது. எனவெ, வெளிநாடுகளில் இதனை பிசாசு செடி என்கின்றனர்.
மேகேதாட்டுவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு சொல்கிறது. அந்த திட்டத்துக்கு ரூ.950 கோடி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். 2014-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சர்கள் ஒரு சதித்திட்டம் போட்டு, நாங்கள் வெளிப்படையாக ஆதரவு தர மாட்டோம், ஆனால் நீங்கள் அணையை கட்டுங்கள் என சொல்லிவிட்டனர். தமிழ்நாட்டை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது.
மேகேதாட்டு விவகாரத்தில் வில்லன் மத்திய அரசு. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு. இப்போது கர்நாடகாவில் இருக்கும் முதல்வர் வெறி பிடித்தவர்.
திருவள்ளுவருக்கு ஆளுநர் காவித் துண்டு போடுகிறார் என அவரை நான் கடுமையாக கண்டித்தேன். ஆனால், நான் இந்துக்களை கண்டிக்கிறேன் என மதிமுக அலுவலகத்தை முற்றுகையிடுவதாக இந்து முன்னணி சொல்லியுள்ளனர். ஒரு கட்சியை அலுவலகத்தை ஏன் முற்றுகையிடுகிறீர்கள்?
ஒரு மாத கால தவெக ஆட்சியின் செயல்பாடுகள் அருமையாக உள்ளது. பொள்ளாட்சி சம்பவத்தை போல எல்லா ஆட்சியிலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதற்கு இது போல குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை இயற்ற வேண்டும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் எல்லா ஆட்சியிலும் தான் நடக்கிறது. அதற்கு இந்த அரசு பொறுப்பல்ல.
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் யோசிக்கவில்லை. பொதுக்குழுவை கூட்டி தற்போதைய நிலவரங்கள் குறித்து விவாதித்து முடிவெடுப்போம். திமுகவுக்கு விசுவாசமாக உழைத்து தேர்தல் பணியாற்றினோம். மற்ற கூட்டணி கட்சிகள் முடிவெடுத்து, ஆளும் கட்சியுடன் சேர்ந்துள்ளனர். நாங்கள் இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சமூக வலைதளங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் காரணம் இல்லாமல் எங்கள் மீது பழி தூற்றுவது குறித்து கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டவர்கள். நாங்கள் இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நாங்கள் அவசரப்படவில்லை. ஜூன் 27 பொதுக்குழு கூடி முடிவை அறிவிப்போம்” என்றார்
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。