

























Updated on:
தமிழ் சினிமாவின் வரலாற்றை பாரதிராஜாவுக்கு முன், பாரதிராஜாவுக்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம். அவர் புதிய கதைகளைச் சொன்ன இயக்குநர் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் காட்சி மொழியையே (Visual Language) மாற்றியவர்.
அவரது வருகை கதையிலும், கதாபாத்திரங்களிலும் மட்டுமல்லாமல், கேமரா எங்கு நிற்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும், ஒளியை எவ வாறு பயன்படுத்த வேண்டும், இயற்கையை எப்படிக் கதை சொல்லலின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்பதிலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
பாரதிராஜாவுக்கு முன்பும் வெளிப்புறப் படப்பிடிப்புகள் (Outdoor Shooting) தமிழ் சினிமாவில் இருந்தன. அந்த நாள், பாசமலர், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் சில காட்சிகள் வெளிப்புறங்களில் படமாக்கப்பட்டிருந்தன.
ஆனால் அவை பெரும்பாலும் பாடல் காட்சிகள் அல்லது குறிப்பிட்ட சில காட்சிகளுக்குள் மட்டுமே இருந்தன. படத்தின் முக்கிய கதை சொல்லல் ஸ்டூடியோ செட்டுகளையே சார்ந்திருந்தது. இந்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றி புதிய வரலாற்றைப் படைத்தவர் பாரதிராஜா. அவர் கிராமங்களைக் கதை சொல்லும் கருவிகளாக மாற்றினார்.
ஸ்டூடியோவிலிருந்து நம் வாழ்வுகளுக்குள்
எழுபதுகளின் தமிழ் சினிமா பெரும்பாலும் ஸ்டூடியோக்களை மையமாக வைத்தே இயங்கியது. பெரிய செட்டுகள், செயற்கை மரங்கள், வர்ணம் பூசப்பட்ட பின்னணிகள், கட்டுப்படுத்தப்பட்ட விளக்குகள் ஆகியவையே திரைப்படங்களின் அடையாளங்களாக இருந்தன.
‘16 வயதினிலே’ திரைப்படம் வெளியானபோது பார்வையாளர்கள் முதல் முறையாக ஓர் அசலான கிராமத்தைத் திரையில் பார்த்தார்கள். அரிதாரம் பூசாத முகங்கள்.
மண் சாலைகள், குடிசை வீடுகள், வெயிலில் கருகிய முகங்கள், ஒற்றையடிப் பாதைகள், உண்மையான வயல்வெளிகள், களத்தில் மேயும் மாடுகள் என அனைத்தும் ஆவணப்படத் தன்மையுடன் பதிவு செய்யப்பட்டன. முழு கிராமமுமே கதையின் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக மாறியது.
நிலப்பரப்பும் கதாபாத்திரம்
பாரதிராஜாவுக்கு முன் இயற்கைக் காட்சிகள் பெரும்பாலும் அழகுக்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர் நிலப்பரப்பை உணர்ச்சிகளுடன் இணைத்தார். ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் கடல், காதலின் பரந்த தன்மையையும் சமூகத் தடைகளையும் பிரதிபலிக்கும் ஓர் உயிருள்ள கதாபாத்திரம்.
‘கடலோரக் கவிதைகளில்’ கடற்கரை, மீனவக் கிராமம், கடற்காற்று ஆகியவை கதையின் உணர்வோடு ஒன்றிணைகின்றன. ‘முதல் மரியாதை’யின் ஆற்றங்கரை, படகு, பரந்த வயல்வெளிகள் கதாபாத்திரங்களின் அமைதியையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு சூழல் மற்றும் மனிதர்களை ஒரே உணர்வுத் தளத்தில் இணைத்தவர் பாரதிராஜா.
இயற்கை ஒளியின் மறுமலர்ச்சி
பாரதிராஜா சூரியனை தனது முதன்மை ஒளியமைப்பாளராக மாற்றினார். காலை ஒளி, நண்பகல் வெயில், மாலைச் சூரியன், மேகமூட்டம் போன்ற இயற்கை மாற்றங்கள் அவரது திரைப்படங்களில் காட்சியின் மனநிலையை நிர்ணயித்தன.
கோல்டன் ஹவர்
சூரியன் மறையும் நேரத்தில் கிடைக்கும் தங்க நிற ஒளியை அவர் தொடர்ந்து பயன்படுத்தினார்.
பேக் லைட்டிங் மற்றும் சில்லவுட்
சூரியனைப் பின்னணியாக வைத்து கதாபாத்திரங்களை நிழல் உருவங்களாகக் காட்டிய காட்சிகள் அவரது திரைப்படங்களின் அடையாளமாகவே மாறின. இன்று இந்திய சினிமாவில் பொதுவாகக் காணப்படும் இந்த அணுகுமுறை அக்காலத்தில் பெரிய காட்சிப் புதுமையாக இருந்தது.
கேமரா அசைவுகளின் புதிய இலக்கணம்
பான் மற்றும் ஜூம் இணைவு - ஒரு பரந்த காட்சியில் இருந்து கேமரா நகர்ந்து அதே நேரத்தில் ஜூம் செய்து கதாபாத்திரத்தின் முகத்தில் இருக்கும் உணர்ச்சியை நெருக்கமாகப் பதிவு செய்யும் இந்த உத்தி பார்வையாளரை காட்சிக்குள் இழுத்துச் செல்லும்.
பொருளிலிருந்து மனிதருக்கு - ஒரு பூ, தாலி, மாட்டு வண்டிச்சக்கரம் அல்லது ஓடும் நீர் போன்றவற்றில் தொடங்கும் ஷாட் மெதுவாக மனிதர்களை நோக்கி நகர்ந்து கவித்துவமான காட்சி அமைப்பை வழங்கியது.
கண்களிலிருந்து கதையைச் சொன்ன இயக்குநர்
இவரது படங்களில் வசனங்களை விட பார்வைகள் அதிகம் பேசும். இதற்காக, திடீர் ஜூம்-இன், நீண்ட லென்ஸ் பயன்பாடு, ஆழமற்ற ஃபோகஸ், இயற்கை பேக் லைட்டிங் போன்ற உத்திகளைப் பயன்படுத்தினர் ஒளிப்பதிவாளர்கள். ஒரு காதல், வலி, அவமானம் அல்லது ஏக்கம், பல நேரங்களில் கண் பார்வையிலேயே வெளிப்படுத்தப்பட்டது.
நீண்ட ட்ராலி ஷாட்டுகள்: உயிருள்ள நிலப்பரப்புகள்
பாரதிராஜாவின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு நீண்ட ட்ராலி ஷாட்டுகள். வயல்வெளிகள், சாலைகள், கிராமத்துத் தெருக்கள், கடற்கரை ஓரங்கள் வழியாக கேமரா நீண்ட தூரம் பயணிக்கும்.
கிழக்கே போகும் ரயில்...
இந்த ட்ராலி ஷாட்டுகள், ஒரு கிராமத்தின் வாழ்க்கையை அறிமுகப்படுத்துகின்றன. மனிதர்களின் உறவுகளை விளக்குகின்றன. சூழலின் உயிரோட்டத்தை உணர்த்துகின்றன. பின்னாளில் பல இந்திய இயக்குநர்கள் இந்த அணுகுமுறையைத் தழுவினர்.
மனிதனைச் சூழலுக்குள் கரைத்த காட்சி மொழி
பாரதிராஜாவின் திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் இயற்கையிலிருந்து தனியாகத் தெரியாது. பரந்த வயல்வெளியில் நடக்கும் மனிதன், கடற்கரையில் சிறிய உருவங்களாகத் தெரியும் காதலர்கள், நதிக்கரையில் அமர்ந்திருக்கும் முதியவர் போன்ற காட்சிகள் மனித வாழ்க்கை இயற்கையின் சிறு பகுதி என்பதை உணர்த்துகின்றன.
பி.எஸ்.நிவாஸ்: இயற்கையின் கவிஞர்
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், போன்ற படங்களில் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.நிவாஸ், பாரதிராஜாவின் காட்சிக் கனவுகளுக்கு வடிவம் கொடுத்தார். இயற்கை வெளிச்சம், உண்மையான சரும நிறங்கள், கிராமத்து யதார்த்தம் ஆகியவற்றை அவர் அற்புதமாகப் பதிவு செய்தார்.
அவரே சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் நகர்ப்புறத் த்ரில்லருக்கான லோ-கீ ஒளியமைப்பையும் உருவாக்கி தனது பல்துறை திறமையை நிரூபித்தார்.
(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。