


















Updated on:
விருதுநகர்: “வரக்கூடிய 5 ஆண்டுகளுக்கு ‘வெற்றித் தமிழகம்’ என்ற தொலைநோக்குத் திட்டம் 436 திட்டங்களை உள்ளிடக்கிய அறம், பொருள், இன்பம் என்ற தலைப்புகளில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது” என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்தார்.
விருதுநகரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரியம் குறித்த ஆய்வுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜஹான் பேசுகையில், “சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளோடு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்பிடி சிறுபான்மை மக்கள் சுமார் 11 சதவிகிதம் பேர் உள்ளனர். மொழிவாரியான, மத வாரியாரியான சிறுபான்மை மக்களுக்கு உதவிகள், நலத்திட்டங்கள் சரியாக சென்றுசேறுகிறதா என்பதை கண்டறியவே இதுபோன்ற ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
தமிழக முதல்வர், மக்கள் வளர்ச்சிக்காக குறிப்பாக சிறுபான்மையின மக்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தி நிதியை அதிகரித்து சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார். கல்வி வளர்ச்சிக்காக முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களையும் தேவாலயங்களையும் புதுப்பிக்கவும் புனரமைக்கவும் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
உலமாக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. சமூதாய முன்னேற்றத்திற்காக ரூ.10 லட்சம் நிதி அளித்தால், அரசு ரூ.20 லட்சம் நிதி வழங்குகிறது. நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மை சமுதாயத்திற்கு நிதி அதிகம் ஒதுக்கப்பட உள்ளது” என்றார்.
அதைத்தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 161 பயனாளிகளுக்கு கல்வி, தொழில் தொடங்குவதற்கான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர், அமைச்சர் ஷாஜகான் அளித்த பேட்டியில், “சிறுபான்மை நலத் துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் சரியாக மக்களை சென்று அடைகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டனவரும் நிதி நிலை அறிக்கையில் துறை சார்ந்த திட்டங்களில் அதிகமானோர் பயன்பெறும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெறப்பட்ட பரிந்துரைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துக்கூறுவோம்.
வரும் நிதி நிலை அறிக்கையில் சிறப்பான திட்டங்கள் இடம்பெற உள்ளது. குறிப்பாக வரக்கூடிய 5 ஆண்டுகளுக்கு ‘வெற்றித் தமிழகம்’ என்ற தொலைநோக்குத் திட்டம் 436 திட்டங்களை அறம், பொருள், இன்பம் என்ற தலைப்புகளில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது. அதில், சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களும் இடம்பெற உள்ளன.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை முயற்சி பல்வேறு அமைப்புகளாலும் அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பர்லோக் என்ற சிறப்புத் திட்டம் மூலம் 2 மாதம் பிணை விடுப்பு வழங்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் செயல்படுத்தும் விதமாக சட்டத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் நாள்களில் இந்த பிணை கிடைக்க அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. அதோடு, நிரந்த விடுதலைக்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டை லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் செயல்திட்டங்களை அரசு வழிவகுக்க உள்ளது.
இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் இட ஒதுக்கீடு உயர்த்திக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேகேதாட்டு அணையை அனுமதிக்கக் கூடாது என்று வழக்குத் தொடுப்போம். அதில், அரசு உறுதியாக இருக்கும். எந்த விதத்திலும் அணையை அரசு அனுமதிக்காது” என்று கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。