


























Updated on:
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ராமேசுவரத்தில் 60 நாட்களுக்கு பின்னர் பாக் நீரிணை கடற்பகுதியில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இந்த கால கட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ல் 15 முதல் ஜுன் 14 வரையிலும் இரண்டு மாத காலங்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
மீன்பிடித் தடைக்காலத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரத்திலிருந்து எஸ்.பி பட்டிணம் வரையிலும் பாக் ஜலசந்தி கடலிலும், தனுஷ்கோடியிலிருந்து கன்னிராஜபுரம் வரையிலும் மன்னார் வளைகுடா கடலிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடற்கரை பகுதிகளில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் விசைப்படகுகளை மராமத்து பணிகளை மேற்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர்.ஞாயிற்றுக்கிழமை ஜுன் 14ம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ராமேசுவரத்திலிருந்து சுமார் 800 விசைப்படகுகளில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 60 நாட்களுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் ஏற்றிக் கொண்டு , மகிழ்ச்சியுடன் மீனவர்கள் விசைப்படகுகள் பாக் நீரிணை கடலை நோக்கி சென்றனர். சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மண்டபம் மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.
ராமநாதபுரம் மீன்வளத்துறை சார்பாக விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசைப்படகு மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற்றே செல்ல வேண்டும். மீறினால் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகலை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது.
பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。