
























Updated on
:
1 min read
சென்னை: வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றம் சாட்டி அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ், வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேர் மீதும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த 2020-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகணேசபாண்டியன், ‘அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்திருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்பதால் இந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
அதையேற்ற நீதிபதிகள், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。