
























Updated on:
புதுடெல்லி: இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி இயக்கம், தற்போது எல்லை கடந்து பாகிஸ்தான் சமூக ஊடகங்களிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
கடந்த மே 16 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த இணைய வழி இயக்கம், ஒரே வாரத்திற்குள் பாகிஸ்தான் இளைஞர்கள் மத்தியிலும் புதிய அரசியல் டிரெண்டாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ ஏற்படுத்திய தாக்கத்தால், பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் ‘காக்ரோச் அவாமி கட்சி’ , ‘காக்ரோச் அவாமி லீக்’ மற்றும் ‘முத்தஹிதா காக்ரோச் இயக்கம்’ போன்ற பெயர்களில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
“அரசியல் அமைப்பு யாரையெல்லாம் கரப்பான் பூச்சிகளாகக் கருதியதோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் நாங்கள்” என்ற வாசகங்களுடன் இந்த கணக்குகள் இளைஞர்களை ஈர்த்து வருகின்றன. பாகிஸ்தானின் பாரம்பரிய அரசியல் கட்சிகளான இம்ரான் கானின் பிடிஐ, நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் மற்றும் பிபிபி ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தும் வகையில், பச்சை மற்றும் வெள்ளை நிறக் கலவையில் கரப்பான் பூச்சி சின்னத்துடன் லோகோக்களையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, போலி சான்றிதழ்களை வைத்துக் கொண்டு வேலைவாய்ப்பின்றி திரியும் இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என ஒப்பிட்டுப் பேசினார். நீதிபதியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவரான அபிஜித் தீப்கே என்பவர் இந்த நையாண்டி அரசியல் அமைப்பைத் தொடங்கினார்.
இந்தியாவில் இந்த இயக்கம் 2 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுடன் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயல்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் இது எந்தவொரு தனிநபர் கட்டுப்பாடும் இன்றி, பல்வேறு தனிநபர்களால் தன்னிச்சையாகவும் பரவலாக்கப்பட்ட முறையிலும் கொண்டு செல்லப்படுகிறது. அதிகார வர்க்கத்திற்கு எதிரான இளைஞர்களின் இந்த ஆன்லைன் நையாண்டிப் போராட்டம், தற்போது இருநாட்டு இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。