










Updated on
:
1 min read
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக 7 மாவட்டங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தலைமை செயலகத்தில் இன்று வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீநிவாஸ் ரெட்டி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பித்த அறிக்கையின்படி, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் 4 பேரும், வாரங்கல் அர்பன், கரீம்நகர் மற்றும் நிஜாமாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், ஜோகுலாம்பா கத்வால், ரங்காரெட்டி மற்றும் சூர்யாபேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி உடனடியாக வழங்க முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உத்தரவிட்டுள்ளார்.
அதிக வெப்பநிலை பதிவாகும் கிராமங்கள் மற்றும் மண்டலங்களைக் கண்டறிந்து, அங்குள்ள மக்களுக்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் முக்கிய சாலைகளில் குளிர்ந்த குடிநீர், மோர் மற்றும் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரீம்நகர், பெத்தபள்ளி, முலுகு, கம்மம், நல்கொண்டா, ஹைதராபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் மே 26 வரை கடுமையான வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், இந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், அவசர மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க கிராமங்கள் மற்றும் நகரங்களில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் மண் பானைகளை வைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。