









Updated on:
குவாஹாட்டி: அசாம் மாநில சட்டப்பேரவையில் இன்று பொது சிவில் சட்டம் நிறைவேறியது. உத்தராகண்ட், குஜராத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் இனி பொது சிவில் சட்டம் அமலில் இருக்கும்.
இந்தச் சட்டத்தின்படி மனைவிக்கு வியாதி ஏற்பட்டுவிட்டது, அவரால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை என்பதற்காக மறுமணம் செய்ய முடியாது. அதேபோல் மனைவி உயிருடன் இருந்தால் ஓர் ஆண் வேறு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. லிவ்-இன் உறவிலும் ஒருவனுக்கு ஒருத்தி என்பது பின்பற்றப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியதைப் பார்ப்போம்.
“மனைவிக்கு உடல்நிலை சரியில்லை அல்லது அவரால் வீட்டை சரிவர பராமரிக்க இயலவில்லை என்ற காரணத்துக்காகவே பலநேரங்களில் ஆண்கள் மறுமணம் செய்கின்றனர். ஆனால், சதி இறந்தபோது சிவன் மறுமணம் செய்யவில்லை. பார்வதி மறுபிறவி எடுக்கும்வரை காத்திருந்தார். ஏனெனில் திருமணம் என்பது 7 ஜென்மம் தொடரும் இரு மனங்களுக்கு இடையேயான உறவு.
மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கணவன் தான் அவரைப் பாதுகாத்து கவனிக்க வேண்டும். எனவே மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக ஓர் ஆண் இன்னொரு திருமணம் செய்துகொள்ள எனது அரசு அனுமதிக்காது. உண்மையான திருமணம் என்பது ஆயுள் முழுவதும் நீடிக்கும் ஆன்ம ஒப்பந்தம். அது தற்காலிகமானது அல்ல.
ஓர் ஆண் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்தால் அது சட்டப்படிச் செல்லாது. மேலும் அவன் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற வேண்டியிருக்கும்” என்று முதல்வர் கூறினார்.
பலதார மணம் குறித்துப் பேசிய முதல்வர், “இஸ்லாம் ஓர் அருமையான மார்க்கம். நான் அதைப்பற்றி தெளிவாகப் படித்துள்ளேன். அதில் ஓர் ஆண் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமானால், முதல் மனைவியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என்று மேற்கோள் காட்டினார்.
லிவ்-இன் ஆக இருந்தாலும்...
லிவ்-இன் உறவு பற்றிப் பேசிய முதல்வர், “மாநிலத்தில் லிவ்-இன் உறவில் இருப்போர் அதைப் பதிவு செய்வது கட்டாயம். ஒரு நபர் ஒரு நேரத்தில் ஒருவருடன் தான் லிவ்-இன் உறவில் இருக்க முடியும். ஒருவரே அசாமில் ஒருவருடன், மும்பையில் இன்னொருவருடனும் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. லிவ்-இன் உறவில் பாலிகேமிக்கு இடமில்லை.
அதேபோல் லிவ்-இன் உறவில் இருக்க இருவருமே 21 வயது அல்லது அதற்கும் மேல் கொண்டவராக இருக்க வேண்டும். இதில் மதம் பிரச்சினையில்லை. ஆனால், திருமண ஆனவர்கள் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. ஓர் ஆண் மனைவி உயிருடன் இருக்கும்போதே லிவ்-இன் உறவில் இருக்க நேர்ந்து அந்த உறவு கசந்து முறிந்தால், லிவ்-இன் உறவில் இருந்த பெண் திருமண பந்தம் மூலம் வாழும் மனைவிபோலவே எல்லா உரிமைகளையும் சட்டப்பூர்வமாகப் பெறலாம்” என்றார்.
அதேபோல் சொத்து உரிமையைப் பொறுத்தவரை, இதுவரை ஓர் ஆண் இறந்தால் மனைவிக்குதான் அவரது சொத்துகள் சென்று சேரும். பொது சிவில் சட்டத்தின்படி, மனைவி மட்டுமல்லாது அவரது பிள்ளைகள், பெற்றோரும் சொத்தில் சம உரிமை கொண்டவர்களாவர் என்றார் முதல்வர்.
மேலும் அவர் ”பொது சிவில் சட்டமானது சீர்த்திருத்தத்துக்கானது. பெண்கள் நலன் சார்ந்தது. அவர்களுக்கு நீதியும், சமத்துவமும் செய்வது. அதுவும் குறிப்பாக சிறுபான்மையின சமூகத்து பெண்களுக்கு நன்மை செய்யக் கூடியது. எனவே, தனிப்பட்ட சட்டங்கள் இனியும் பெண்கள் சம உரிமையை, அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பை தடுப்பதாக இருக்கக் கூடாது” என்றார்.
பொது சிவில் சட்டம் அசாம் மலையக, சமநிலைப் பகுதிகள் வாழ் பழங்குடிகளுக்குப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து விளக்கிய முதல்வர், “பலதார மணம் பழங்குடிகள் மத்தியில் இல்லை. அவர்கள் பெண்களுக்கு சம உரிமை தருகின்றனர். அதேபோல் பழங்குடிகள் மத்தியில் லிவ்-இன் உறவுப் பழக்கம் இல்லை. ஒருவகையில் அவர்கள் காலங்காலமாகவே பொது சிவில் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் போல. சுய ஒழுக்கமே சிறந்தது. அது ஏற்கெனவே பழங்குடிகளிடம் உள்ளதால் அவர்களுக்கு இச்சட்டம் தேவையில்லை” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。