




























Updated on
:
1 min read
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் விஜய்: 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்தபின் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல. இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளை பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருவாயில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிக்கும். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் பணவீக்கத்தை அதிகரித்து, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். புயலில் சிக்கிய படகு போல குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும். மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே அதிகமாக உள்ளன. இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்திருக்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 என உயர்த்தியிருப்பதன் மூலம் பாஜக அரசு எளிய மக்களின் அடிவயிற்றில் கை வைத்துள்ளது. இதனால் மிகவும் பாதிக்கப்படப் போவது விளிம்புநிலையைச் சார்ந்த ஏழை-எளிய உழைக்கும் மக்கள்தான்.
அமமுக பொதுச்செயலாளார் டிடிவி.தினகரன், தவக தலைவர் வேல்முருகன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், உள்ளிட்டோரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。