






















Updated on:
மதுரை: வேறு மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015-ல் முஸ்லிம் மதத்துக்கு மாறி, பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். அதன்பின்னர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் ‘முஸ்லிம் லெப்பை’ என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் லெப்பை என சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழக அரசு 2024 மார்ச் 9-ம் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில், மனுதாரர் தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் சான்றிதழ் கோரி மனு அளித்துள்ளார்.
அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறும்போது அவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்’ என சான்றிதழ் வழங்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மதம், இனம், சாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது. அதேநேரம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசு கவனமாக செயல்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்காமல், குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்த்துள்ளது. அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் சாதியினர் பிரிவில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவர் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)’ எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்றும் கூறப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘இந்து மதம்போல அல்லாமல் தங்களது மதங்கள் சமூக சமத்துவத்தை அளிப்பதாக கிறிஸ்தவ மிஷனரிகளும், முஸ்லிம் பிரச்சாரகர்களும் கூறி வருகின்றனர். மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இத்தகைய நிலைப்பாடு இருக்கும்போது, முஸ்லிம் மதத்திலும் படிநிலை அமைப்பு உள்ளது என்பது நேர்மையற்றது. முஸ்லிம் மதத்தில் சில பிரிவுகளை ‘பிற்படுத்தப்பட்டவை’ என்றும், மற்றவற்றை ‘முன்னேறியவை’ என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் கட்டளைகளுக்கு முரணானது. இஸ்லாம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவே விழைகிறது. இறைவனின் பார்வையில் அனைவரும் சமம். அங்கு சமூகப் படிநிலைகள் ஏதும் இல்லை.
இருப்பினும், வரலாற்று ரீதியான காரணங்களால், முஸ்லிம் சமூகமும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது இந்து மதத்தில் உள்ள சாதி அமைப்புக்கு இணையானவை என்றுகூட துணிந்து கூறலாம். சாதி எவ்வாறு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதோ, அதேபோல ஒருவர் பிறப்பாலேயே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக அறியப்படுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில், ‘முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அடக்க முடியாது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது, வெறும் அரசாணையால் நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க முடியாது. சட்டம் நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம், தகுதி இருந்தாலும் அரசு நிர்வாகத்துக்கு அத்தகைய உரிமை இல்லை. அரசு நிர்வாகம் ஒரு போதும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாது. அரசுக்கு எதிரான முடிவாக இருப்பதாக கூறி அதை மீறுவதற்கு நினைத்தால், அது சட்ட ஆட்சியின் முடிவுக்கு வழிவகுக்கும்.
முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள் ஏதேனும் ஒரு வகையான இடஒதுக்கீட்டுப் பலனை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய மட்டுமே மாநில அரசு இத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 மார்ச் 9-ம் தேதிபிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்’ என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。