


















பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று எரிபொருள் நிரப்ப காத்திருந்த வாகன ஓட்டிகள். படம்: பிடிஐ
Updated on
:
2 min read
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்றே அமலுக்கு வந்தது.
இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேற்றே நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.103.67-க்கும், டீசல் ரூ.95.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.77-ல் இருந்து ரூ.97.77 ஆகவும், டீசல் விலை ரூ.87.67-ல் இருந்து ரூ.90.67 ஆகவும் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான மதிப்புக்கூட்டு வரி (VAT) வேறுபாட்டால், ஒவ்வொரு நகரத்திலும் விலையில் சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன.
4 ஆண்டுகளுக்குப் பிறகு.. கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளம்,மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் நிறைவடைந்த 16 நாட்களுக்குப் பிறகு இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தேர்தல் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், உள்நாட்டில் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் போக்கு கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த மோதலுக்கு முன்னதாக ஒரு பேரல் 70 - 72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, பதற்றத்தின் உச்ச கட்டத்தில் 120 டாலரை கடந்தது. தற்போது 104 - 110 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இறக்குமதிச் செலவை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 96.14 ஆக சரிந்து வரலாற்று வீழ்ச்சியை சந்தித்தது.
சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலை குறையும்போது, அதற்கேற்ப இந்தியாவில் விலை குறைக்கப்படவில்லை. ஆனால், தற்போது சர்வதேச சந்தையை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்மூலம் எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து, சரக்கு கையாளும் செலவுகள் அதிகரிக்கும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம் 42 மாதங்களில் இல்லாத அளவாக 8.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. எரிபொருள்சிக்கனத்தை கடைபிடிக்குமாறும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。