























பிரதமர் மோடி | கோப்புப் படம்
Updated on:
புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று நடைபெற்ற சூழலில், தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகள் எவ்வித போக்குவரத்து நெரிசலிலும் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் 45 நிமிடங்கள் தனது பயணத்தைத் தாமதப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, உடனடியாகத் தனது இல்லத்துக்கு புறப்படாமல் பிற்பகல் 2 மணி வரை விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தார்.
பொதுவாகப் பிரதமரின் கான்வாய் செல்லும் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்படும். நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கவிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
பிரதமரின் வருகையால் டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வித போக்குவரத்து பாதிப்போ அல்லது மாணவர்களுக்குக் காலதாமதமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், பிரதமர் இந்த முடிவை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு சரியாக 2 மணிக்கு தொடங்கிய பின்னரே, அவர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். பிரதமரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களால் முந்தைய தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் இன்று நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 5,440 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் என மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.
முறைகேடுகளைத் தடுக்க தேசிய தேர்வு முகமை இந்த முறை தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதன்படி, 95,000-க்கும் மேற்பட்ட தேர்வு அறைகள் 1.38 லட்சம் சிசிடிவி கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன. மேலும், மின்னணு முறைகேடுகளைத் தடுக்க 51,000-க்கும் அதிகமான சிக்னல் ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்வு மையங்களில் 6,700 கண்காணிப்பாளர்கள் மற்றும் 48,000-க்கும் மேற்பட்ட பயோமெட்ரிக் சரிபார்ப்புப் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。