




















Updated on:
புதுடெல்லி: டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 9 பேரை டெல்லி காவல் துறை நேற்று கைது செய்தது. இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு மற்றும் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் முக்கிய பொது நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதிக்கட்ட திட்டமிடலில் ஒரு கும்பல் இயங்கி வந்துள்ளது. எல்லையின் மறுபுறத்தில் இருந்து செயல்படும் பாகிஸ்தான் உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ), தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோரின் உத்தரவின் பேரில் இவர்கள் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதை அறிந்த உளவுத் துறையினர் கொடுத்த துல்லியமான தகவலின் அடிப்படையில், டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவினர், ஒருங்கிணைந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், பிடிபட்டவர்களில் சில வெளிநாட்டினரும் அடங்குவர். இருப்பினும் அவர்களது அடையாளங்கள் மற்றும் குடியுரிமை குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தீவிரவாதக் குழுவுக்கும், மும்பையில் உள்ள குற்றவியல் நெட்வொர்க்குகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்கும், அவர்களுக்கான தளவாடங்கள் மற்றும் நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்வதற்கும் இந்த குற்றவியல் வழிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு முகமைகள் கருதுகின்றன.
இதற்கிடையே, கைது நடவடிக்கையைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்கள், முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவைச் சேர்ந்த மற்ற நபர்கள் யாரேனும் நாட்டின் பிற பகுதிகளில் செயல்படுகிறார்களா என்பதைக் கண்டறிய, கைது செய்யப்பட்டவர்களின் தகவல் தொடர்பு பதிவுகள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களது ஒட்டுமொத்த வலையமைப்பை சிறப்புப் பிரிவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நடக்க இருந்த ஒரு பெரிய அசம்பாவிதத்தை தடுத்ததில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்படும் விசாரணை முழுமையடைந்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே வாகனத்தில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருள் வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。