
























Updated on:
மதுரை: தமிழகத்தில் மனமகிழ் மன்றங்களில் தவெகவினர் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடுவதைத் தடுக்கக்கோரிய வழக்கில் எம்.பி., எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களுக்கு ஆய்வு நடத்த அதிகாரம் உண்டா என்பதை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர் சங்கத் தலைவர் வீரபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்க உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் அரசிடம் முறையாக எப்எல்-2 உரிமம் பெற்று மனமகிழ் மன்றங்களை நடத்தி வருகிறார்கள். மன்ற உறுப்பினர்களுக்கு மது விற்பனை செய்து வருகிறோம். மனமகிழ் மன்றங்களின் நடவடிக்கையை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
ஆனால், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், யூடியூப் செயற்பாட்டாளர் என்ற பெயரில் மனமகிழ் மன்றங்களுக்குள் அத்துமீறி நுழைந்து செல்போனில் வீடியோ பதிவு செய்கின்றனர். பின்னர் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தரித்து சமூகவலை தளங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர்.
இவர்கள் மனமகிழ் மன்றங்களில் மது அருந்தும் உறுப்பினர்களின் அடையாளம் தெரியுமாறு வீடியோ ரீல்ஸ்கள் எடுத்துப் பரப்புகின்றனர். மது அருந்துவோர், ஊழியர்களுடன் தகராறு செய்கின்றனர். வீடியோக்களை காட்டி மனமகிழ் மன்ற உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி மற்றும் திருச்சி மாவட்டங்களில் மனமகிழ் மன்றங்களில் ஆளும் கட்சி நிர்வாகிகள் ஆய்வு என்ற பெயரில் நுழைந்து தேவையற்ற பிரச்சினைகளைச் செய்துள்ளனர். மனமகிழ் மன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதால் தொழில் பாதிக்கப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் மனமகிழ் மன்றங்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வீர.கதிரவன், வழக்கறிஞர் பாஷியம் வாதிட்டனர். பின்னர் நீதிபதி, மனமகிழ் மன்றங்களில் சோதனை நடத்த எம்.பி. எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களுக்கு அதிகாரம் உண்டா என்பதைத் தெரிவிக்க வேண்டும். மனமகிழ் மன்றங்களில் ரீல்ஸ் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。