









திருச்சி அரசு மருத்துவமனை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் எஸ்.ரமேஷ். உடன் சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்.ரவிசங்கர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள். (உள்படம்) உயிரிழந்த சீதாலட்சுமி.படம்: ர.செல்வமுத்துகுமார்
Updated on
:
2 min read
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி திடீரென உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள், சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் மணக்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் சேட்டு. விவசாய தொழிலாளி. இவரது மகள் சீதாலட்சுமி(19), திருச்சி கிஆபெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 3-ம் ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், மூக்கில் வளர்ந்திருந்த சதை பிரச்சினைக்காக சீதாலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அவருக்கு மயக்க மருந்து செலுத்தியபோது படபடப்பு அதிகமாகியுள்ளது. இதனால், மயக்கநிலையில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டும், பலனின்றி அன்று இரவு சீதாலட்சுமி உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் சீதாலட்சுமி உயிரிழந்ததாக புகார் தெரிவித்து அவரது பெற்றோர், உறவினர்கள், சக மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு நேற்று மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
தகவலறிந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், மத்திய மண்டல ஜ.ஜி. பாலகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்.ரவிசங்கர், ஆட்சியர் வே.சரவணன் உள்ளிட்டோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அரசு குழு அமைத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக தற்காலிக நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் விசாரணையில் மருத்துவர்கள் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
உயர்மட்ட குழு அமைப்பு: இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் திருச்சிக்கு விரைந்துள்ளனர். அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை வழங்குவர். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்கள் பிரதிநிதிகள் தவிர மற்ற யாரும் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தக்கூடாது. போலீஸாரை சுதந்திரமாக செயல்படவிட்டாலே குற்றங்கள் குறைந்துவிடும். முன்பு இருந்த அரசில் அரசியல் தலையீடு அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அதுபோல் இல்லை. எங்கு குறை இருந்தாலும் சரி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆட்சியரிடம் முறையீடு: போராட்டத்தில் ஈடுபட்ட செவிலிய மாணவிகளில் 15 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.சரவணனை சந்தித்து, ‘உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு,குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மயக்கவியல் மருத்துவரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செவிலிய மாணவிகள் கலைந்து சென்றனர்.
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。