























திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கையில் வேலுடன் தவெக தலைவர் விஜய்.
Updated on
:
2 min read
தூத்துக்குடி: தவெக தலைவர் விஜய் நேற்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நேற்று அதிகாலை திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.
இதற்காக நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அவர் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் அதிகாலை 4.45 மணியளவில் திருச்செந்தூர் வந்தடைந்தார்.
பூரண கும்ப மரியாதை
திருச்செந்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்குச் சென்ற அவர், அங்கு பட்டு வேட்டி, சட்டை அணிந்து கொண்டு அதிகாலை 5.10 மணியளவில் கோயில் வளாகத்துக்கு வந்தார்.
பேட்டரிகார் மூலம் பிரகாரத்துக்கு வந்த அவர், கோயில் அருகே உள்ள கடலில் கால் நனைத்து விட்டு உள்ளே வந்தார். சண்முக விலாசம் மண்டபம் பகுதியில் அவருக்கு திரிசுதந்திரர்கள் சார்பில் பூரணகும்ப மரியாதை மற்றும் 2 அடி நீளமுள்ள வேல் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிகாலை 5.40 மணியளவில் மூலவர் சந்நிதியில் அமர்ந்து விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று மூலவர் சுப்பிரமணியரை வழிபட்டார். தொடர்ந்து சண்முகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சத்ருசம்ஹார மூர்த்தி, பெருமாள் சந்நிதிகளில் தரிசனம் செய்துவிட்டு வடக்கு வாசல் வழியே காலை 6.20 மணியளவில் வெளியே வந்தார்.
அங்கிருந்து தனியார் ரிசார்ட்டுக்கு சென்ற அவர் 7.15 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் காலை 9 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
போலீஸ் பாதுகாப்பு
அவருடன், பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் மட்டும் வந்திருந்தனர். விஜய் வருகையை அறிந்து அதிகாலையிலேயே ஏராளமான தொண்டர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர். தூத்துக்குடி எஸ்.பி. மதன் தலைமையில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூர் கோயிலில் விஜய் சுவாமி தரிசனம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோதிடரின் ஆலோசனைப்படி அடுத்து சீரடி செல்ல திட்டம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில், தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, அவரிடம் விஜய் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘திருச்செந்தூர், சீரடி தரிசனம் அவசியம்’ என கூறியுள்ளார். இதனால்தான் விஜய் நேற்று திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்தார். ஜோதிடரின் ஆலோசனைப்படி, அடுத்து சீரடியும் செல்கிறார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய குதிரை பேரத்தை தவிர்க்க, சென்னையில் நாளை (ஏப்.30) தவெக வேட்பாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டுகிறார். அதில் பல உத்தரவுகளை பிறப்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。