




























Updated on:
பெரம்பலூர்: குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்குச் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் வழிமறித்துத் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், கல் மற்றும் கட்டையால் தாக்கிக் கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டபேரவை தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பு வகித்து வருபவர் எஸ்.எஸ்.சிவசங்கர். முன்னாள் அமைச்சரான சிவசங்கர் கடந்த சில நாட்களாக குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி இன்று 6-வது கட்டமாக மேலமாத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூரை சேர்ந்த திமுகவினர் குன்னத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குன்னம் பேருந்து நிலையம் அருகே காத்திருந்த குன்னம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையிலானவர்கள், திமுகவினர் வந்த காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர், கல் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். சுமார் 30 நிமிடம் இந்த மோதல் நீடித்தது. இந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீஸார் இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் மோதல் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்பி லலித்குமார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
விசாரணையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிகவை விமர்சனம் செய்தது தொடர்பாக, குன்னம் தொகுதி விசிகவினர், கோபம் அடைந்து, திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இந்தத் தாக்குதலில் திமுகவினர்தான் அதிகளவு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。