





















Updated on
:
1 min read
சென்னை: மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட விதிகளின்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாய் மற்றும் பூனை ஆகியவற்றுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுப்படுத்தவும், செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை எளிதாக பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை பயன்பாட்டில் உள்ளது.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு கடந்த டிச.14-ம் தேதி வரை வழங்கப்பட்ட நிலையில், இதுவரை 78,392 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில் 9,656 உரிமங்கள் புதுப்பிக்கப்படாத நிலையில் தற்போது 68,736 செல்லப்பிராணி உரிமங்கள் நடைமுறையில் உள்ளன.
அனைத்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களும் உரிமம் பெறுவதை உறுதி செய்ய, இந்த காலக்கெடு வரும் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஜூன் 16-ம் தேதி முதல் உரிமம் பெறாத நாய் மற்றும் பூனை ஆகிய செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。