























Updated on
:
1 min read
சிவகாசி: சாத்தூர் தொகுதியில் சசிகலா தரப்பு வேட்பாளர் பெற்ற 11,602 வாக்குகளால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், இந்த தேர்தலில் தொகுதி மாறி சாத்தூரில் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து திமுக சார்பில் கடற்கரைராஜ், தவெக சார்பில் அஜித், நாம் தமிழர் சார்பில் ஆனந்தராஜ், சசிகலா தரப்பில் பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் இசக்கிராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் முதல் 3 சுற்றுகளில் திமுக முன்னிலை பெற்ற நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றார். 10-வது சுற்றுக்கு மேல் பாஜகவும், திமுக, தவெக மாறி மாறி முன்னிலை வகித்தது.
கடைசி சுற்றுகளில் முன்னிலை பெற்ற திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் 62,060 வாக்குகள் பெற்று 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 56,071 வாக்குகளும், தவெக வேட்பாளர் அஜித் 53,498 வாக்குகளும், சசிகலா தரப்பு வேட்பாளர் 11,602 வாக்குகளும் பெற்றனர்.
சசிகலா தரப்பு வேட்பாளர் இசக்கிராஜா பிரித்த 11,602 வாக்குகள் காரணமாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。