





















Updated on
:
1 min read
சென்னை: தமிழகத்தில் கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திரா பிரதேசம் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (மே 21) ஓரிரு இடங்களிலும், 22 முதல் 24-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், 22-ம் தேதி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த (மணிக்கு 40 கிமீ வேகத்தில்) காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை முதல் 24-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் வரதனப்பள்ளியில் 7 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 6 செமீ, கள்ளக்குறிச்சியில் 5 செமீ, கடலூர் வனமாதேவி, புவனகிரி, சிதம்பரம், கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。