

























கே.வெங்கட நாராயணா, முதல்வர் விஜய் | கோப்புப்படம்
Updated on:
சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்த நியமனத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் தான் கே.வெங்கட நாராயாணா. இந்த சூழலில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவர்
“தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த ஜோசப் விஜய் அரசு! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த கே. வெங்கட நாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?
சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் விஜய், நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சினையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?
மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்” என்று எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன், பொதுச் செயலாளர் - அமமுக
“தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே வெங்கட் நாராயணாவை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக கே வெங்கட் நாராயணாவுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.
எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாதக
“தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。