


























Updated on
:
1 min read
சென்னை: மே தின தொடர்விடுமுறை, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மே தினத்தை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததால் அதிகளவில் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள், குறிப்பாக ஐடி உழியர்கள் மற்றும் பல துறைகளில் பணிபுரிவோர் இந்த விடுமுறையில் சுற்றுலா செல்வார்கள் என்பதால், போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் நேற்று முன்தினம் (ஏப்.30-ம் தேதி) முதல் மே 2-ம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக கடந்த 2 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு இயக்கிய சிறப்பு பேருந்துகளில் 2.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே தின தொடர்விடுமுறை மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஏப்.30-ம் தேதி முதல் மே 1-ம் தேதி அதிகாலை 3 மணி வரை, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,13,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இன்றைய தினம் 3,150 பேர் முன்பதிவு செய்துள்ளனர், சென்னையில் இருந்து கூடுதலாக 450 பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。