










Updated on
:
1 min read
சென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர்களுக்கு, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி, மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற்றுள்ள புதிய தலைவருக்கு, தன்னை ஒரு சிறந்த நிர்வாகியாக நிரூபிக்க குறைந்தபட்சம் 6 மாத அவகாசத்தை தமிழக அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும்.
2026 தேர்தலில் 108 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும், தலைவர்களும் பெருந்தன்மையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதன்பின், தவெக ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்து, ஒவ்வொரு கட்சியும் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப முடிவெடுத்து நாகரிக அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி, தமிழக அரசியலில் ‘குதிரை பேரம்’ என்ற அவப்பெயருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவெக எந்தவித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக ஆட்சி அமைக்கவும், அவர்கள் விரும்பினால் மட்டுமே கூட்டணி அமைக்கவும் அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் பழனிசாமியிடம், தேசியத் தலைவர்கள் இது குறித்துப் பேசி, தவெக சுய விருப்பத்துடன் ஆட்சி அமைக்கவும், ஊழல் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் அழுத்தம் இன்றி செயல்படவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு ஆதரவளிக்க வேண்டும்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற மக்களின் எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், மாற்றத்துக்கான அடையாளமாக தவெக தலைவர் விஜய்யை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。