


















Updated on:
சென்னை: “இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தவெக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயவும், கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தவும், ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசி ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முடிவு செய்திருந்தார்.
அதன்படி, முதல் நாளான இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியே 3 மணி நேரம் பழனிசாமி கேட்டறிந்தார்.
அப்போது, “வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி 3 நாட்களில்தான் வெற்றியை பறிகொடுத்து விட்டோம். சமூக வலைதளங்களை சரிவர கையாளாததே தோல்விக்கு காரணம். அதிமுக சார்பில் வார் ரூமை தனியாக உருவாக்க வேண்டும்” என பழனிசாமியிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து நிர்வாகிகளிடையே பழனிசாமி பேசும்போது, “அதிமுக நிர்வாகிகள் சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். வார் ரூம் குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படும். எதன் மூலம் தவெக வென்றதோ, அதன் மூலமே இனி நாமும் வெல்வோம். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக அரசின் தவறுகளை உடனுக்குடன் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். தவெகவின் வெற்றி நிலையானதல்ல. தவெக நமக்கு எதிரியே இல்லை. திமுகதான் நமக்கு உண்மையான எதிரி. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம் வெல்வோம்” என்று பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறும்போது, “கட்சியிலிருந்து சாரைசாரையாக யாரும் செல்லவில்லை. பலனடைந்தவர்கள் பலன் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கட்சியின் கொள்கைகளை விடாப்பிடியாக மனதில் நிறுத்தி வைத்துள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் பழனிசாமியின் தலைமையேற்று சிறப்பான முறையில் செயல்படுகிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் ஒரு பூத்தில்கூட தவெகவை விட அதிமுக அதிக வாக்குகள் வாங்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருக்கிறார். அவரது அரசியல் வரலாறு தெரியுமா? அவர் எந்தெந்த கட்சிகளில் இருந்து வந்துள்ளார் தெரியுமா? சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。