

























Updated on:
கேரளா: கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு, பெண்களுக்காக ‘பிரியதர்ஷினி திட்டம்’ என்ற இலவச பேருந்து பயணத் திட்டத்தை இன்று (ஜூன் 15) தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கேரள அரசு பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம்.
கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற வாக்குறுதியை ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அளித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கேரள முதல்வர் வி.டி.சதீசன், திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம், 7 வகையான சாதாரண பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம். அந்த பேருந்துகளை அடையாளம் காண 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும். இத்திட்டம் பெண்களின் அதிகாரமளித்தலுக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் சதீசன், “பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் என்பது வெறும் சலுகை அல்ல, இது கேரளப் பெண்களுக்கு அரசு அளிக்கும் மரியாதையின் அடையாளம். சமூகத்தில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான செய்தியாகவும் இது அமைகிறது.
இது கேரளாவுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் சுமார் 800 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. கே.எஸ்.ஆர்.டி.சி வருவாயை அதிகரிப்பதில் அதன் ஊழியர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களும் பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவே உள்ளனர்.
அரசுப் பேருந்துகள் இயங்காத பல பகுதிகளில் மக்கள் தனியார் பேருந்துகளையே நம்பியுள்ளனர். அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை அரசு அறிமுகப்படுத்தும்” இவ்வாறு அவர் கூறினார்.
பொருளாதார தாக்கம்: இந்தத் திட்டம் பெண்களின் அன்றாடப் பயணச் செலவை சுமார் 15% முதல் 25% வரை குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பயணச் செலவு குறையும்போது, பெண்களின் கையில் கூடுதல் பணப்புழக்கம் இருக்கும். இது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும். இத்திட்டத்தால் தென் கேரளப் பகுதி மக்கள், குறிப்பாகத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகப் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் மட்டும் சுமார் 687 சாதாரண பேருந்துகள் செயல்பாட்டில் உள்ளன. ஒட்டுமொத்த தென் மாவட்டங்களில் 1,268 சாதாரண பேருந்துகள் இயங்குவதால், இப்பகுதி மக்கள் இத்திட்டத்தின் மிகப்பெரிய அளவில் பயணடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。