























Updated on:
சென்னை: திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மாலில் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு விற்பனையாளராக உள்ள மாதேஷ் என்பவரை கடந்த 14-ம் தேதி சரண்யா என்ற பெண் தொடர்பு கொண்டு, கிரெடிட் கார்டு மூலம் 2 ஐபோன்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மறுநாள் (15-ம் தேதி) மதியம், சரண்யா கூறிய இடத்துக்கு மாதேஷ் சென்று 2 ஐபோன்கள், ஓர் ஆப்பிள் ஏர்பாட்ஸை வழங்கினார். அதை தனது தாயாரிடம் வீடியோ கால் மூலம் காண்பித்துவிட்டு வருவதாகக் கூறி, ஐபோன்களுடன் சென்ற சரண்யா திரும்பி வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாதேஷ் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் எண் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தி நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா பிரியா (28) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் சரண்யா பிரியா பிசியோதெரபி உதவியாளர் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் தங்கி மருத்துவமனைகளில் வேலை தேடி வந்தது தெரிந்தது.
மேலும் தனது காதலனுக்காக, இந்த நூதனத் திருட்டில் ஈடுபட்டு, திருடிய ஐபோன், ஆப்பிள் ஏர்பாட்ஸை அவரிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。