























Updated on:
புதுடெல்லி: தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதா 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார். இதேபோல யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-ஐ மத்திய அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, “மகளிருக்காக 33 சதவீத இடஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டையும் மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தையும் இணைத்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவடையவில்லை. அதற்கு முன்பாகவே மக்களவை இடங்கள் 850 ஆக அதிகரிக்கப்படும் என்று எவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது” என்று காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் கேள்வி எழுப்பினார்.
பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறும்போது, “ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 195 ஆக உயரும். தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும்.
கேரளாவில் 20 தொகுதிகளில் இருந்து 30 தொகுதிகளாகவும், ஆந்திராவில் 25 தொகுதிகளில் இருந்து 38 தொகுதிகளாகவும், தெலங்கானாவில் 17 தொகுதிகளில் இருந்து 26 தொகுதிகளாகவும், கர்நாடகாவில் 28 தொகுதிகளில் இருந்து 42 தொகுதிகளாகவும் அதிகரிக்கும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்றே தற்போதைய மசோதாவும் உள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு புள்ளிகூட கூடுதலாக சேர்க்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。