




















Updated on:
புதுடெல்லி: இசை, நடனம் மற்றும் நாடகத்துக்கான தேசிய அகாடமியாக விளங்குவது, சங்கீத நாடக அகாடமி. இது இந்தியாவின் கலைகளுக்கான மிக உயர்ந்த தேசிய அமைப்பாகும். கடந்த 1953-ல் நிறுவப்பட்டு மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இதன் பொதுக்குழுக் கூட்டம் கடந்த மார்ச் 22 முதல் 26-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இதில், 2024-25-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.
அகாடமி ரத்னா விருதுக்கு 7 பேர் தேர்வாகி உள்ளனர். இதில் தமிழரான பரதநாட்டியக் கலைஞர் சுதர்னி ரகுபதியும் ஒருவர் ஆவார். இசைக் கலைஞர்களுக்கான 12 விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.விஜய் சிவா, ஏ.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தேர்வாகினர்.
நடனக்கலைக்கான 12 விருதாளர்களில் பரதநாட்டியத்திற்காக தமிழர்களான ரோஜா கண்ணன், கலாஷேத்ராவின் கே.ஹரிபிரசாத் ஆகியோரும் குச்சுப்புடிக்காக நாகஜோதி மற்றும் சீதா நாகஜோதியும் இடம்பெற்றுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த இந்த தம்பதிகளில் நாகஜோதி, டெல்லி தமிழ் சங்கம், டெல்லி கல்விக் கழகத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார்.
நாடக நடிகர்களுக்கான விருது பெறும் 10 பேரில் தமிழ் நடிகர் வாகை சந்திரசேகரும் உள்ளார். நாட்டுப்புறக் கலைகளுக்கான 13 விருதாளர்களில் ஒருவராக புதுச்சேரியின் கே.முருகன் உள்ளார். மேலும், அனைத்து துறைகளின் விருதுக்கு 5 கலைஞர்கள் தேர்வாகி உள்ளனர்.
பெல்லோஷிப்களுக்காக 40 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்கள் ரூ.3 லட்சம் ரொக்கம் அளித்து கவுரவிக்கப்பட உள்ளனர். சங்கீத் நாடக அகாடமி உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் யுவ புரஸ்கார் விருதுக்கு 106 இளம் கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட உள்ளன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。