





















பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் வேருடன் வயலில் சாய்ந்துள்ள மக்காச்சோள பயிர்கள்.
Updated on
:
1 min read
பெரம்பலூர்: கடும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்துக்கு உட்பட்ட மலையாளப்பட்டி கிராமத்தில் 100 ஏக்கர் மக்காச் சோளம் மற்றும் 20 ஏக்கர் வாழை மரங்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், பல நாட்களாக கடுமையாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேவேளையில், சில இடங்களில் வேளாண் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள், 20 ஏக்கர் வாழை மரங்கள் வயலில் சாய்ந்துவிட்டன. இதனால், பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.நீலகண்டன் கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு, அவை அறுவடை காலத்தை நெருங்கி இருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் 100 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் வேருடன் வயலில் சாய்ந்துவிட்டன. இதுவரை ஏக்கருக்கு ரூ.43 ஆயிரம் வரை செலவழித்துள்ள நிலையில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, 20 ஏக்கர் வாழை மரங்களும் சாய்ந்துவிட்டன. பயிர்கள் பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。