





















பாகனேரியில் கோடையிலும் வற்றாமல் தாகம் தீர்க்கும் பட்டபிளான் ஊருணி.
Updated on:
சிவகங்கை: பாகனேரியில் உள்ள ஊருணி கோடையிலும் வற்றாமல் 300 ஆண்டுகளாக கிராம மக்களின் தாகம் தீர்த்து வருகிறது. அதன் நீர்ப்பிடிப்புக்காக 30 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஆக்கிரமிப்பால் பல ஆயிரம் குளங்கள், கண்மாய்கள் மாயமாகிவிட்டன. ஆனால், சிவகங்கை அருகே பாகனேரியில் உள்ள பட்டபிளான் ஊருணியும், அந்த ஊருணியின் நீர்ப்பிடிப்புக்காக நகரத்தார் தானம் வழங்கிய 30 ஏக்கர் நிலமும், ஆக்கிரமிப்பின்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த ஊருணி நீரை, அப்பகுதி மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நீர்ப்பிடிப்பு பகுதியில் குப்பை கொட்டாததுடன், வேறு எந்த அசுத்தமும் செய்வதில்லை. புதர் மண்டினாலும் உடனடியாக அகற்றிவிடுகின்றனர். மேலும், வரத்துக் கால்வாயும் சீராக இருப்பதால் நீர்ப்பிடிப்பு பகுதியில் விழும் மழைநீர் தடையின்றி ஊருணியை அடைகிறது.
இதனால், மழைக் காலங் களில் வேகமாக ஊருணி நிரம்பி விடும். சிறிய மழைக்கு கூட ஊருணிக்கு தண்ணீர் வந்துவிடும். கோடையிலும் ஊருணி வற்றுவதில்லை. அக்கிராமத்துக்கு போதிய குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ள போதிலும், ஊருணி நீரைத்தான் அப்பகுதி மக்கள் குடிக்க, சமைக்க பயன்படுத்துகின்றனர்.
இந்நீரை சிறுவயல் உள்ளிட்ட சுற்றுப் பகுதியைச் சேர்ந்த மக்களும் எடுத்துச் செல்கின்றனர். ஊருணிக்குள் கால்நடைகள் இறங்கிவிடாமல் பாதுகாக்க கம்பிவேலி அமைத்துள்ளனர்.
இதுகுறித்து பாகனேரி கே.என்.சுப்பிரமணியன் கூறியதாவது: ஊருணிக்கு எக்காலத்திலும் நீர் வரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அக்கால கட்டத்திலேயே சிந்தித்து முன்னோர்கள் நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலங்கள் இன்றும் எந்தவித ஆக்கிரமிப்பின்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
செம்மண் பூமியாக இருப்பதால், ஊருணி நீர் சுவை யாக இருக்கும். இதனால், இன்றும் பெரும்பாலானோர் குடிக்க, சமைக்க பயன்படுத்துகின்றனர். கோடையிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。