













Updated on:
புதுடெல்லி: மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் சிலர் ஓய்வுபெறுவதாலும், ராஜினாமா செய்ததாலும் காலியாகும் 26 இடங்களுக்கு அடுத்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவையில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் ஜூன் 21-ம் முதல் ஜூலை 19-ம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வுபெறுகின்றனர். இவர்களில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் அடங்குவர்.
இதனால் ஆந்திரா,குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியமாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும், ஜார்கண்ட்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரமில் தலா ஒரு இடங்களுக்கும் ஜூன்18-ம் தேதி தேர்தல் நடைபெறும்.
இத்துடன், மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் தலா ஒரு இடங்களுக்கான இடைத் தேர்தலும் நடைபெறும். மகாராஷ்டிரா மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சுனேத்ராபவார், தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டு துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், மேற்கண்ட 2 இடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 8-ம் தேதி கடைசி நாள். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால், தமிழகத்தில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களில் ஒன்று காலியாகியுள்ளது. இந்த இடத்துக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் தற்போது தவெகவுக்கு அதிக எண்ணிக்கை இருப்பதால், அந்த மாநிலங்களவை இடம் தவெகவுக்கு செல்கிறது.
இதன் மூலம், சட்டப்பேரவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் தவெக முதல்முறையாக தடம் பதிக்க உள்ளது. இந்த ஒரு இடம் தவெக சார்பில், காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி அல்லது தவெகவைச் சேர்ந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் தவெக சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。