























Updated on
:
1 min read
சென்னை: செந்தில் பாலாஜி, மின் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2021 முதல் 2023 ஆம் வரையிலான காலகட்டத்தில், செந்தில் பாலாஜி, மின் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக விசாரணையை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர்.
ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் சிபிஐ, விரைந்து விசாரணையை நடத்தி முடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிபிஐ விசாரணைக்கு, டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், வழக்கை சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கு தானே தவிர, குற்றச்சாட்டுக்களின் தகுதி குறித்த முடிவாக கருதமுடியாது எனவும், இந்த கருத்துக்கள் யாருக்கும் எதிரானவையாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。