























Updated on
:
1 min read
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 30 வயது நீதிபதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தற்கொலை சம்பவம் தெற்கு டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் பகுதியில் அந்த நீதிபதி வசித்து வந்த இல்லத்தில் அவர் உயிரிழந்தார். இதனை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் கூறியுள்ளதாவது:
சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் சஃப்தர்ஜங் என்கிளேவ் காவல் நிலையத்துக்கு வந்த அவசர அழைப்பில் நீதிபதி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தது. இந்த தகவலை அவரது உறவினர் போலீஸாருக்கு தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தோம். அங்கு அவரது உடல், குளியலறையில் இருந்தது. அதை மீட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கிருந்த மருத்துவர்கள் நீதிபதி உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது அமன் குமார் சர்மா என்பது உறுதியாகி உள்ளது. அவர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை மரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து உயிரிழந்த நீதிபதியின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்து வருகிறோம்.
2018-ல் சட்ட படிப்பை முடித்த அமன் குமார் சர்மா, 2021-ல் நீதித்துறை பணியில் சேர்ந்துள்ளார். பல்வேறு நீதிமன்றங்களில் அவர் பணியாற்றி வந்துள்ளார். கர்கர்தூமா நீதிமன்றத்தில் கடந்த 2025-ல் பணியில் சேர்ந்துள்ளார். பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை தனது பணியில் அவர் கையாண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。