























Updated on:
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 181 கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, கடந்த மே 6-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே 7 முதல் மே 29-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்காக 2.24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் வெறும் 71,502 இடங்கள் (56.32 சதவீதம்) இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. மீதமுள்ள 55,457 (43 சதவீதம் இடங்கள்) நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் வரலாற்றில் இதுவரை இவ்வளவு இடங்கள் காலியாக இருந்ததில்லை. அரசு கலைக் கல்லூரிகளில் உயர்கல்வி கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கப்பட்டாலும் அரசு கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு, தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேர முதன்மை காரணம் கல்வித்தரம் மோசமடைந்து வருவதுதான்.
அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த 12 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியர்களுக்கான 9 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆசிரியர்கள் இல்லாததால் கல்லூரிகளின் கல்வித்தரம் மோசமடைந்திருக்கிறது.
இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதன் மூலம்தான், அரசுக் கல்லூரிகள் மீதான நம்பிக்கையைப் பெறமுடியும். எனவே, அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。