




















Updated on:
திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பதவியேற்றுள்ள வி.டி.சதீசன், ஜூன் 15-ம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல்வரான பிறகு அவர் இதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.டி.சதீசன் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருடன் 20 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதையடுத்து, தலைமைச் செயலகம் சென்று பொறுப்பேற்றுக்கொண்ட வி.டி.சதீசன், தனது முதல் அமைச்சரவையைக் கூட்டினார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த கோப்புகளில் அவர் கையெழுத்திடார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வி.டி.சதீசன், “தேர்தலின்போது நாங்கள் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 2 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. ஒன்று, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம். வரும் ஜூன் 15-ம் தேதி முதல் கேரள அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும்.
இரண்டாவது, வயதானவர்களுக்காக தனி துறையை நாங்கள் உருவாக்கப் போகிறோம். இந்தியாவில் இது முதலாவதாக இருக்கும். வயதானவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஒரு நாகரிக சமூகத்தின் முக்கிய அளவுகோல். இதை கருத்தில் கொண்டு ஒரு சிறந்த நாகரிக சமூகமாக கேரளாவை மாற்ற நாங்கள் கனவு காண்கிறோம். வயதானவர்களின் நலன்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வர உள்ளோம். இதற்காக தனி துறையை நாங்கள் ஏற்படுத்த இருக்கிறோம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊதிய உயர்வு கோரி ஆஷா பணியாளர்கள் நீண்டகாலமாக போராடினார்கள். அப்போது நாங்கள், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தோம். அதன்படி, தற்போது அவர்களுக்கான மாத ஊதியத்தில் ரூ.3,000 உயர்த்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,000, பள்ளிகளில் சமையல் பணியாளர்களுக்கு ரூ.1,000, ப்ரீ-ஸ்கூல் ஆசிரியர்களுக்கு ரூ.1,000, ஆயாக்களுக்கு ரூ.1,000 மாத ஊதியம் வழங்கப்படும்.
கேரள சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மே 21-ம் தேதி தொடங்க உள்ள சிறப்புக் கூட்டத் தொடரில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பார்கள், மே 22-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும்” என தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。