

























Updated on
:
1 min read
மிகவும் ஏழ்மையான மீனவக் குடும்பத்தில் பிறந்து இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருந்தேன். நிரந்தர வேலை இல்லாமல் அங்கும் இங்குமாகத் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துவந்தேன். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திருமணம் முடிந்து குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டு மாப்பிள்ளையாக என் மனைவி வீட்டிலேயே இருந்துவிட்டேன்.
என் பட்டப் படிப்பை வைத்து தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தேன். பி.எட்., படித்திருந்தால் மட்டுமே ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்கிற நிலை ஏற்பட்டபோது, என் மனைவி சிறிதும் யோசிக்காமல் அவரது நகைகளை அடகு வைத்துத் தனியார் கல்வியியல் கல்லூரியில் என்னை பி.எட்., படிக்கவைத்தார்.
பி.எட்., படித்து முடித்த எனக்கு எப்படியாவது அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை வீண் போகவில்லை. 2013இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று 2014 முதல் ராமநாதபுரம் மாவட்டம், சுந்தரமுடையான் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். கணவனாக வந்த என்னை அரசுப் பள்ளி ஆசிரியராக உயரவைத்த என் மனைவிக்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
என்னைச் சூழ்ந்திருந்த வறுமையும் அகன்றது. அரசுப் பள்ளி ஆசிரியர் பணி மூலம் ஏழை மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை அளித்த மன நிறைவோடு, வறுமையில் வாடும் குழந்தைகளுக்குப் படிப்பிலும் இதர வகைகளிலும் உதவி பேரானந்தம் அடைந்து வருகிறேன்.
என்னுடைய எல்லா நற்செயல்களுக்கும் உதவியாக இருக்கும் என் மனைவிக்குக் காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன்பும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்பும் வீட்டு வேலைகளில் உதவுகிறேன். என்னை வாழவைத்த என் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உறுதுணையாக இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அறிதலும் புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இல்லறத்தை நல்லறமாக்கும் என்பதை உணர்ந்து நாங்கள் மனமொத்து வாழ்கிறோம்.
- மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。