


























Updated on:
சென்னை: நடப்பு மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று செலுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல 15-ம் தேதி பணம் வரவு வைக்கப்பட்டதால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் 14-ம் தேதி வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த திமுக ஆட்சியில் 2023-ம் ஆண்டு செப்.15-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 நேரடியாகவே செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்பு தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த பிப்.13-ம் தேதி வரவு வைக்கப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. முன்னதாக, தவெக ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்று தேர்தலின்போது அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
இந்தச் சூழலில், முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும். அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. நடப்பு மே மாதத்துக்கான உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மாதம் தோறும் உதவித் தொகை பெற்று வந்த பெண்களும், உதவித் தொகையை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று செலுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய் தனது வாக்குறுதிப்படி ரூ.2,500 எப்போது வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் பெண்களிடம் எழுந்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。