














Updated on
:
1 min read
சென்னை: தமிழகத்தில் 2 மாதங்களில் 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்புப் படை என 3 முக்கிய கோப்புகளில் முதல்வரானதும் ஜோசப் விஜய் கையெழுத்திட்டார்.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, முதல்வர் ஜோசப் விஜய், தவெக தேர்தல் அறிக்கையில் ஏற்கெனவே தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 3 முக்கிய அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். அதன் விவரம்:
* இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
* பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள், பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழகத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்கள் மற்றும் 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்கப்படும்.
முதல்வர் ஜோசப் விஜய் கையெழுத்திட்டதன்மூலம் மேற்கண்ட 3 திட்டங்களும் நடைமுறைக்கு வர உள்ளன.
பொதுவாக, பதவிப் பிரமாண நிகழ்வு முடிந்து தலைமைச் செயலகத்துக்கு வந்து, முதல்வராக அலுவலகத்தில் பொறுப்பேற்ற பிறகுதான், முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்புகளில் கையெழுத்திடுவது வழக்கம். ஆனால், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், தான் அளித்த வாக்குறுதிகள் தொடர்பான அரசாணை அறிவிப்புக்கு, பதவிப் பிரமாண விழா மேடையிலேயே ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。