



























Updated on:
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் நஸ்ராபூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 65 வயது முதியவர் ஒருவர் கடந்த 1-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.
சம்பவ இடத்துக்கு அருகில் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது ஏற்கெனவே 2 பாலியல் வழக்குகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் மே 7-ம் தேதி வரை விசாரணை நடத்த போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் டெஹு பகுதியில் உள்ள நதியில் 4 வயது மகளின் அஸ்தியைக் கரைக்க வந்த தந்தை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீதி கிடைக்க வேண்டும்: "எனது மகளின் அஸ்தியைக் கரைக்க இங்கு வந்துள்ளேன். இதற்கிடையில், மகள் சீரழிக்கப்பட்டதை அறிந்து எனக்கு ஆறுதல் சொல்ல அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக்கு வந்து செல்வதாக எனது வீட்டில் இருந்து உறவினர்களும், நண்பர்களும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அதுவரை அரசியல்வாதிகள் யாரும் எனது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல வர வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் மகளுக்கு நீதி கிடைத்த பிறகு தாராளமாக எல்லோரையும் சந்திக்கிறேன்." இவ்வாறு சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதியவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வலியுறுத்தப்படும்" என்று உறுதி அளித்து உள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。