





















Updated on:
மதுரை: "கடந்த திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன, தற்போதைய தவெக அரசில் அத்தகைய சூழல் இல்லை" என மதுரையில் இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் திமுகவை காட்டமாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமை வகித்தார். ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கவுரவ்குமார் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், எம்.பி சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.கல்லாணை, எஸ்.ஆர்.தங்கப்பாண்டி, சோ.கார்த்திகேயன், எம்.எம்.கோபிசன், ம.விஜய், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், மாநகர காவல் ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.தேவநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ஊரகவளர்ச்சித்துறை மற்றும் சமூகநலத்துறை சார்பில் பணியாற்றி மரணமடைந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், ‘‘தமிழக முதல்வர் விஜய் தமிழக மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் எனவும், மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் சென்றடையவேண்டும் என எண்ணுகிறார். கடந்த கால ஆட்சிகளைப்போல் அல்லாமல் சிறப்பான ஆட்சியை நடத்த வேண்டும் என நினைக்கிறார். அதற்கு அதிகாரிகள் தங்களது ஆலோசனைகளை இந்தக் கூட்டத்தில் வழங்கலாம்.
பலதுறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடையும் வகையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதனை பாதுகாக்கவும், அதுபோன்று சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கலாம் ’’ என்றார்.
திமுக ஆட்சி மீது சு.வெங்கடேசன் விமர்சனம்: பின்னர் மதுரை தொகுதி எம்பி சு.வெங்கடேசன் எம்பி பேசுகையில், "கடந்த காலங்களில் நேர்மையான அதிகாரிகளுக்கு சில தடைகள் இருந்தன, அவர்களது கைகள் கட்டப்பட்டு கை விலங்கு போடப்பட்டிருந்தன. தற்போது அந்த சூழல் இல்லை. தமிழக முதல்வர் விஜய் நேர்மையான வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை நடத்த விரும்புகிறார். அத்தகைய நேர்மையான அதிகாரிகளுக்கு தவெக ஆட்சி ஒரு பொற்காலம். எனவே நேர்மையான அதிகாரிகள் திறம்பட செயல்பட்டு அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。