


























Updated on:
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்கியது.
“ஜூன் 30 வரை நடக்கும் இந்த கணக்கெடுப்பில் மக்களை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று சந்திக்கிறார்கள். மக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்படும். இந்தப் பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். தவறான தகவல் தந்தால் அபராதம் விதிக்கப்படும்,” என ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த மே மாதத்தில் 15 நாட்களுக்கு சுயகணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தன. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகள் தொடங்கின.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்கியது. பணிகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ்பாபு தலைமையில் 3000 கணக்கெடுப்பு ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் கணக்கெடுப்பு வீடுதோறும் நேரடியாக சேகரிக்கப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு அதிகாரிகள் அனைத்து வீடுகளுக்கும் நேரில் வந்து தகவல்களை சேகரிக்க துவங்கினர்.
வரும் ஜூன் 30 வரை கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த கணக்கெடுப்பில், வீட்டின் வசதிகள் மற்றும் நிலைகள் குறித்து 33 கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு பொதுமக்கள் உண்மையான பதில்களை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இப்பணி தொடர்பாக ஆட்சியர் குலோத்துங்கன் கூறியதாவது: கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக அதிகாரிகள் வீடுகளின் வளாகத்திற்குள் வருவதையும், கணக்கெடுப்பு எண்கள் அல்லது குறியீடுகளை இடுவதையும் அனுமதித்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
துறையால் சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 15-ன் கீழ் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும். இந்த விவரங்கள் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளிலும் ஆதாரமாக பயன்படுத்தப்படாது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்காத சூழல் இருந்தாலோ அல்லது வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தாலோ சட்ட விதிகளின்படி ரூ 1000-ம் வரை அபராதம் விதிக்கலாம்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。