

























கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் அரவானுக்காக தாலிக் கட்டிக் கொண்ட திருநங்கைகள். | படம்: எம்.சாம்ராஜ் |
Updated on
:
1 min read
கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி திருநங்கைகள் கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 11-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து 15-ம் தேதி மகாபாரதம் சொற்பொழிவும், 16-ல் சந்துனு சரிதம், 17-ல் பீஷ்மர் பிறப்பு, 18-ம் தேதி தாமர் பிறப்பு, 22-ல் கூத்தாண்டவர் பிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் அரவானுக்கு தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மணமகள் கோலத்தில் கோயிலுக்கு வந்தனர். பின்னர் மஞ்சள் கயிறுடன் கோயிலுக்குள் சென்று கூத்தாண்டவர் முன்னிலையில் அரவானை தங்களின் கணவனாகப் பாவித்து, தாலி கட்டிக் கொண்டனர்.
இதையடுத்து கும்மி, நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்று தேரோட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அரவான் களப்பலி மற்றும் திருநங்கைகள் விதவைக் கோலம் பூணும் நிகழ்வும் விடையாற்றி உற்சவமும் நடைபெறும்.
இதையொட்டி 700 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை, கிராமத்தினர் செய்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。