

























Updated on:
மதுரை: தனியார் கல்வி நிறுவன விண்ணப்ப படிவங்களில் சாதி, சமூக விவரங்கள் கேட்க தடை கோரிய வழக்கில் தமிழக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் சாதி கேட்ககூடாது என உள்ளது. இதை மீறி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது விண்ணப்பதாரர்களின் சாதி மற்றும் சமூக விவரங்களை கட்டாயமாகக் கேட்பது மாணவர்கள் தேர்வு மற்றும் சேர்க்கை செயல்முறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகை செய்யும்.
எனவே தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களும் விண்ணப்பப் படிவங்களில் சாதி அல்லது சமூக விவரங்களை கட்டாயமாக சேகரிக்க தடை விதிப்பதோடு, தனியார் நிறுவனங்களில் பாகுபாடு இல்லாத சூழலை உறுதி செய்ய உரிய ஒழுங்கு முறைகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், கல்வி நிறுவனங்களில் விண்ணப்பங்களில் சாதிய விவரங்களை கேட்பதை கட்டாயமாக்கக்கூடாது என்பது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா? எனக் கேட்டு, மனு தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。