






















Updated on:
சென்னை: குழந்தைகள், சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்கும் போக்சோ நீதிமன்றங்களின் தற்போதைய செயல்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2025 செப்டம்பரில் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, 2 காவலர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கடந்த நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், “குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை, சட்டப்படி 2 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது மாநிலம் முழுவதும் எத்தனை பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறியதாவது: ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, குற்றம்சாட்டப்பட்ட 2 போலீஸாரும் தாக்கல் செய்த மனுக்கள் கடந்த ஜூன் 4-ம் தேதிதள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
ஜூன் 24 முதல் சாட்சி விசாரணை தொடங்க உள்ளது. விசாரணையை ஜூலை 31-க்குள் முடிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு களை விரைந்து விசாரிக்கும் வகையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க 2 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும். குழந்தைகள், சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் எத்தனை உள்ளன, இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இல்லை, போக்சோ நீதிமன்றங்களின் தற்போதைய செயல்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், பாலியல் குற்றங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。