




















Updated on
:
1 min read
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்குப் பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: ஆடுகளம் இரண்டு விதமான வேகத்தில் இருந்தது.
பந்து எழும்பும் விதமும் சீராக இல்லாமல் ஏறி இறங்கியது. ஆரம்பத்திலேயே நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்திருக்காவிட்டால் 170 அல்லது 180 ரன்களை எட்டியிருக்க முடியும். அது சவாலான இலக்காக இருந்திருக்கும். இருப்பினும், பேட்டிங் பவர்பிளே முடிந்த பிறகும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், குறிப்பிட்ட இலக்கை கொடுப்பது சந்தேகம் என்றே கருதினேன்.
சில ஷாட்களை விளையாடுவது சற்று கடினமாக இருந்தது. ஆடுகளம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆடுகளம் எப்படிச் செயல்படும் என்று கணிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இங்கு நாங்கள் விளையாடிய கடந்த மூன்று போட்டிகளில், ஓரளவிற்கு ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டோம். 60 சதவீதம் இப்படித்தான் இருக்கும் அல்லது 70 சதவீதம் இப்படித்தான் இருக்கும் என்று ஓரளவுக்கு எங்களால் உணர முடிந்தது.
ஆனால் இந்தப் போட்டியில் ஆடுகளம் எப்படிச் செயல்படும் என்பது குறித்து எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. ஆடுகளத்துக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொண்டு விளையாட நினைப்பதற்குள் காலதாமதமாகிவிட்டது. அதன் பிறகு, நாங்கள் முயற்சி செய்தும் அது கைகூடவில்லை. எதுவும் சாதகமாக அமையவில்லை.
முதல் பந்திலிருந்தே இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாளாக அமைந்தது என்றுதான் கூறுவேன். பீல்டிங்கில் நாங்கள் சற்று மந்தமாக இருந்ததாக உணர்ந்தேன். இந்த ஆட்டத்தின் முடிவை தள்ளி வைத்துவிட்டு அடுத்த போட்டியை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும். இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。