























சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி
Updated on
:
1 min read
ராஜபாளையம்: ராஜபாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதன் மூலம், 64 ஆண்டு கால சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் ராஜபாளையம் முதன்முறையாக அமைச்சர் தொகுதி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
ராஜபாளையம் சட்டப் பேரவை தொகுதி 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை 16 தேர்தல்களை சந்தித்துள்ள ராஜபாளையம் தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட எந்த உறுப்பினரும் அமைச்சராக இருந்தது இல்லை.
இத்தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ ஒருவர் முதன்முறையாக அமைச்சராக பதவியேற்றுள்ளதால், தொகுதிக்கு நிறைய திட்டங்கள் வரும் என தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து பணியாற்றி வந்த ஜெகதீஸ்வரிக்கு, விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டபோது நகர மகளிர் அணி செயலாளர் பதவியும், பின்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டபோது, ராஜபாளையம் தொகுதியை கொண்ட விருதுநகர் தென் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு ஜெகதீஸ்வரிக்கு வழங்கப்பட்டது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் ஆதரவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற ஜெகதீஸ்வரி, அதே வழியில் அமைச்சர் பதவியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீஸ்வரி ராஜபாளையம் தொகுதியின் நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் பகுதியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, அரசு கலைக் கல்லூரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம், நகரின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய 6-வது மைல் நீர்த்தேக்கம் அருகே உருவாக்கப்பட்ட கூடுதல் நீர்த்தேக்கத்தை சீரமைத்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகள், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。