


























Updated on:
சென்னை: திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெகவின் வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுகவுக்கு பெரும் பலமாக இருப்பது வழக்கறிஞர் அணிகள்.
தேர்தல் நேரத்தில் வேட்புமனு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக தயாரித்துக் கொடுத்தல், கட்சி அளவிலும், அரசுக்கு ஆதரவான, எதிரான வழக்குகளில் உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட்டு வெற்றியைத் தேடித் தருதல், எம்.பி. எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு வரை சட்ட ரீதியான அனைத்து விவகாரங்களிலும் வழக்கறிஞர் அணியின் பங்கு முக்கியமானது.
பொதுவாக, ஆளுங்கட்சியின் வழக்கறிஞர் அணியில் இருந்து திறமையான, நன்கு பரிச்சயமான, கைதேர்ந்த வழக்கறிஞர்களே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்களாக ஆளுங்கட்சி சார்பில் நியமிக்கப்படுவார்கள்.
குறிப்பாக, உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்தான் அரசியலமைப்புச் சட்ட ரீதியாக அரசுக்கும், நீதித் துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு பாலமாக செயல்படும் மாநில அரசின் உயர் பதவி வகிக்கும் சட்ட அதிகாரி ஆவார்.
அவரது தலைமையின்கீழ் உரிமையியல், குற்றவியல் வழக்குகளைக் கையாளும் வகையில் அமையும் 100-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் குழு, ஆட்சியாளர்களுக்கு பக்கபலமாக செயல்படும்.
புதிய கட்சியான தவெகவில் திமுக, அதிமுக அளவுக்கு பலமான வழக்கறிஞர் அணி இல்லை. இதனால், முதல் வேலையாக கட்சியின் வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஒருவேளை, தொங்கு சட்டப்பேரவை அமைந்தாலும், சட்ட ரீதியிலான அடுத்தகட்ட நகர்வுகளுக்கு கைதேர்ந்த சட்ட நிபுணர்களின் ஆலோசனை தேவை என்பதை உணர்ந்துள்ள அவர், தமிழகம் முழுவதும் உள்ள தவெக வழக்கறிஞர் அணியை தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
பல்வேறு கட்சிகளில் பொறுப்பு வகித்த மூத்த வழக்கறிஞர்கள் பலரும், தேர்தல் வெற்றிக்கு முன்பே தவெகவில் இணைவதற்கு காய் நகர்த்தினர். அவர்களில் திறமையானவர்களை அடையாளம் கண்டு, கட்சிக்குள் இணைத்துக் கொள்ள விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தவெக வழக்கறிஞர் அணியில் இணைந்தால், அரசு வழக்கறிஞர் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் பலரும் தற்போது தவெகவில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。