























Updated on
:
1 min read
சென்னை/ திருத்தணி: தேர்தலில் விஜய்க்கு கிடைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு, காலை 6.30 மணி அளவில் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தார்.
மூலவர் சுப்பிரமணிய சுவாமி, உற்சவர் சண்முகர், ஆபத்சகாய விநாயகர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில்வளாகத்தில் அமர்ந்து 10 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கோயில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும்’’ என்றார். பிறகு, கோயில் தேர் வீதியில் இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு காலை சிற்றுண்டி, நிதியுதவி அளித்துவிட்டு, சென்னைக்கு திரும்பினார். பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது: விஜய் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.
அந்த மனப்பான்மையைப் பாராட்டுகிறேன். எந்த கூட்டணியும் இன்றி தனித்துதான் நிற்பேன் என ஒரு தலைவராக அவரது துணிச்சல் போற்றுதலுக்கு உரியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. அவருக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாகவே இதைப் பார்க்கிறேன். ஒரு தந்தையாக, நான் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். என் மகனுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் உள்ள விஜய் இல்லத்தில், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தாய் ஷோபா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தவெக வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். விஜய் படத்தின் பாடலை அனைவரும் பாடியும், விசில் அடித்தும் அவர்கள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。