

























Updated on:
சென்னை: “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் விஜய் வழங்கினார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தமிழக முதல்வர் விஜய் இன்று (ஜூன் 15) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள் பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையில் இருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.
அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் கடந்த ஜூன் 8-ம் தேதி அன்று புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.
தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தின் நாட்டுப் பற்று, துணிச்சல், கடமை உணர்வு தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்ப்பதோடு, இளம் தலைமுறையினர் இடையே வீர உணர்வு மற்றும் தியாக மனப்பான்மையை வளர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.
பல்வேறு வீர தீரச் செயல்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் விருதுகளைப் பெறுகின்றபோது, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு ராணுவ வீரர் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
அவ்வகையில், உயரிய விருதான “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு, தமிழக முதல்வர் தமிழக அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில், மனித வள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சரத்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பொதுத் துறை சிறப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை இயக்குநர் சுந்தரவல்லி, முன்னாள் படை வீரர் நலத்துறை இணை இயக்குநர் மேஜர் சுரேஷ், ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。